எரிவாயு விஷயத்தில் ஏமாற்றப்படுகிறது தமிழகம்
பிப்ரவரி 10,2010
கிருஷ்ணா - கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவில் தமிழகத்துக்கும் பங்கு அளிக்கப்படும் என்று வாக் குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும் இந்த வாக்குறுதி, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உட்பட சம்பந்தப்பட்ட சில அரசு துறைகளுக்கு இடையே, கால்பந்து போல, மாறி மாறி உதைபட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு கிடைத்துள்ளது. இந்த எரிவாயுவில் தமிழகத்திற்கும் பங்கு வேண்டுமென்று, எரிவாயுவை எடுத்து வழங்கும் உரிமம் பெற்ற, ரிலையன்ஸ் நிறுவனத்திடமும், மத்திய அரசிடமும், பல முறை தமிழக அரசு கோரிக்கை வைத்தது.எந்தெந்த ஊர்கள் வழியாக எடுத்துச் செல்வது, எந்த இடத்தில் குழாய்களை பதிப்பது போன்ற விவரங்கள், இறுதி செய்யப்பட்டன. இதற்கான அனுமதி, 2007ம் ஆண்டு, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அளித்தது. கர்நாடகா, மேற்குவங்க மாநிலங்களுக்கும், இந்த எரிவாயு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.தமிழகத்தின் பங்காக, நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ஸ்டாண்டர்டு சதுர மீட்டர் அளவு, எரிவாயு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில், சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சி, திருச்சி, நாகை, புதுக்கோட் டை, சேலம், நெல்லை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய நகரங்களுக்கு, எரிவாயு வழங்கும், "சிட்டி காஸ்' திட்டமும் அறிவிக்கப்பட்டது. புதிதாக துவங்கப்படும் மின்திட்டங்களுக்கும் எரிவாயு அளிக்க வேண்டும் என்று, தமிழக அரசு நிபந்தனை விதித்தது.திடீரென, 2007ம் ஆண்டு, பெட்ரோலிய ஒழுங்குமுறை ஆணையம் என்று புதிதாக ஒரு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டது.தமிழகத்திற்கு எரிவாயு வழங்கும் திட்டத்தை, இந்த ஆணையம் பரிசீலித்தது. எந்த முடிவும் எடுக்காமல், இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போட்டது. 2009ம் ஆண்டு ஜூனில், "சிட்டி காஸ்' வழங்கும் திட்டத்திற்கு மட்டும், ஆணையம் ஒப்புதல் வழங்கியது.
உ.பி.,யில் மதுரா, மீரட், ஆக்ரா, புலந்த்சர், ராஜஸ்தானில் கோட்டா, அஜ்மீர், அரியானாவில் சோன்பேட், ம.பி., யில் திவாஸ், ஆந்திராவில் காக்கிநாடா உட்பட 13 நகரங்களுக்கு எரிவாயு அளிக்கலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டது.மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, தன் மாநிலத்தில் உள்ள ஒரு நகருக்காவது எரிவாயு கொடுக்க வேண்டும் என சண்டை போட்டதால், கிடைத்தது; இல்லையெனில், கிடைத்திருக்காது. தமிழக நகரங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.இதற்கிடையில், டில்லி ஐகோர்ட்டில், ஒரு பொதுநலவழக்கு தொடரப்பட்டது. இந்த எரிவாயுவைப் பகிர்ந்து கொள்வதில், முறைகேடு நடக்கிறது என்று கூறி, தொடரப்பட்ட அந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், எரிவாயு பகிர்ந்து வழங்கும் அதிகாரம், பெட்ரோலிய ஒழுங்கு முறை ஆணையத்திற்கு இல்லை என்று கூறி தீர்ப்பளித்து விட்டது.
இதற்கிடையே முதல்வர் கருணாநிதி, தமிழகத்துக்கு எரிவாயு அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தி, பிரதமர், சோனியா ஆகியோருக்கு, நான் கைந்து கடிதங்கள் எழுதினார்.டில்லி ஐகோர்ட் தீர்ப்பு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை.இரு தினங்களுக்கு முன், பெட்ரோலிய அமைச்சக செயலர் சுந்தேரசனை, பெட்ரோலிய ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மான்சிங் சந்தித்து, ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் போது, டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டாமென்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால், அங்கு வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு சொல்ல ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள், கிருஷ்ணா - கோதாவரி எரிவாயு திட்டமே திசை மாறிப் போக வாய்ப்பு ஏற்படும். தமிழகத்திற்கு எதுவும் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும்.
காவிரியும், எரிவாயுவும் : காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நதிநீர் ஆணையம் இறுதி தீர்ப்பு அளித்தது. இதை அமல்படுத்தாமல், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றதன் விளைவு, தமிழகத்தின் சோகம் இன்னமும் தீர்ந்தபாடில்லை.ஒரு பிரச்னை சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றாலே அது, இழுத்தடிக்கும் தந்திரம்தான். காவிரி பங்கீடு எப்படி முடங்கி கிடக்கிறதோ அதேபோலதான் தற்போது எரிவாயு பங்கீடும் முடங்கும் நிலையை அடைந்துவிட்டது.
குழாய்கள் மூலம் குஜராத்துக்கு தான்: துணை முதல்வர் ஸ்டாலின் இம்முறை டில்லிக்கு வந்திருந்தபோது பிரதமர் மற்றும் சோனியாவை சந்தித்தார். டில்லியில் பல முறை நிருபர்களை சந்தித்தபோதெல்லாம் திரும்ப திரும்ப அவர் கூறிய விஷயம், "கிருஷ்ணா - கோதாவரி படுகை எரிவாயுவை தமிழத்துக்கு தர வேண்டுமென்று வலியுறுத்தினேன்' என்பது தான். ஏற்கனவே குழாய்கள் பதிக்கப்பட்டு, குஜராத், மகாராஷ்டிராவுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தின் பங்கை தருவது குறித்து, ஒழுங்குமுறை ஆணையம், சுப்ரீம் கோர்ட் சென்று திரும்பிய பிறகே தெரியும். இந்நிலையில், தமிழகத்திற்கு எரிவாயு என்பது எட்டாக்கனி தான்.
மாசில்லா நகரங்கள்: எரிவாயு மட்டும் தமிழகத்திற்கு கிடைத்துவிட்டால், ஏற்கனவே திட்டமிட்டிருக்கும் நகரங்களில் இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் சி.என்.ஜி.,க்கு மாறிவிடும். அனைத்து நகரங்களுமே மாசுகட்டுப்பாடு கொண்ட நகரங்களாக மாறிவிடும். காற்று மாசுபடாமல், கார்பன் புகை இல்லாமல் சுற்றுச்சூழல் மேம்படும். எரிவாயுவை பயன்படுத்தி தற்போதைக்கு இந்தியாவிலேயே சி.என்.ஜி.,யால் வாகனங்கள் இயக்கப்படுவது டில்லியில் மட்டும் தான். "சிட்டி காஸ் சப்ளை' திட்டம், டில்லி, மும்பை ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் தான் செயல்படுகிறது