Monday, February 8, 2010

சிந்து எழுத்து முறையில் இருந்து வந்ததே தமிழி முறை : ஆய்வாளர்

சிந்து எழுத்து முறையில் இருந்து வந்ததே தமிழி முறை : ஆய்வாளர்
பிப்ரவரி 09,2010

General India news in detail


சென்னை : ""தென்னிந்திய மக்களுக்கு சிந்து எழுத்து முறை தெரிந்திருந்தது என்பது உறுதி. ஆகவே தமிழி எழுத்துமுறை சிந்து எழுத்து முறையிலிருந்து வந்து தான் உருவாகி இருக்கும்,'' என்று சிந்து எழுத்து ஆய்வாளர் பூரணசந்திரஜீவா கூறினார்.சென்னையில் தமிழ் வளர்ச்சி வளாகத்தில் தொல்லியல் துறை கருத்தரங்கு நேற்று நடந்தது. இதைத் தொல்லியல்துறை முதன்மை செயலர் ஸ்ரீதர் துவக்கி வைத்து பேசியதாவது: நமது எழுத்து வளர்ச்சி எங்கு துவங்கியது என்ற கேள்வி உள்ளது. சிந்து எழுத்திலிருந்து வந்ததா அல்லது இந்த சிந்து எழுத்து இடையில் வந்ததா என்ற கேள்வியும் உள்ளது. மயிலாடுதுறைக்கு அருகில் செம்பியன் கண்டியூரில்கிடைத்த கல்வெட்டில் நான்கு குறியீடுகள் கிடைத்தன. சிந்து எழுத்து குறியீடுகள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறியீடுகளை வைத்து காலத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்றாலும், எதை உணர்த்துகிறது என்று தெளிவாக தெரியவில்லை. சிந்து எழுத்து ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இவ்வாறு ஸ்ரீதர் பேசினார்.


நிகழ்ச்சியில், "சிந்து எழுத்தும் தமிழியும்- ஓர் ஒப்பாய்வு' என்ற தலைப்பில், சிந்து எழுத்து ஆய்வாளர் பூரணசந்திர ஜீவா பேசியதாவது: சிந்து எழுத்து முறை, படங்களை அடிப்படையாக கொண்டது என்கின்றனர். இது முழுவதும் படங்களால் ஆன எழுத்துக்கள் அல்ல. முழுமையாக எல்லா எழுத்தும் செயற்கை வடிவங்களால் ஆனது. செயற்கை வடிவம் மட்டுமல்லாமல், வடிவியல் கணித அடிப்படையில் வடிவங்களாக சிந்து எழுத்துக்கள் உள்ளன. இதற்கு காரணம் சிந்துவெளி மக்கள், நகர அமைப்புகளை வடிவமைக்கும் கட்டடக் கலையில் மிகச் சிறந்த அறிவு பெற்றிருந்தனர். இந்த அறிவை பயன்படுத்தி எழுத்துகளுக்கு செயற்கையான வடிவங்களை அமைத்தனர். எனவே, இந்த வடிவங்களுக்கு கொடுத்த பொருள் பொருந்தாமல் போய்விட்டது.


இந்த சிந்து எழுத்து வடிவங்கள் தமிழி என்ற எழுத்து வடிவங்களுடன் பொருந்துகின்றன. இரண்டையும் ஒப்பிட்டு சிந்து எழுத்தை படிக்க முயற்சிக்கலாம் என்பது உறுதி. தமிழகத்தில் சிந்து எழுத்து வடிவங்கள் பெருமுக்கல், கீழ்வாலை, பொதிகைமலை குகை, இலங்கையில் யாழ்பாணத்தில் ஆணைக்கொட்டடி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. தென்னிந்திய மக்களுக்கு சிந்து எழுத்து முறை தெரிந்திருந்தது என்பது உறுதி. ஆகவே தமிழி எழுத்துமுறை சிந்து எழுத்து முறையிலிருந்து வந்து தான் உருவாகி இருக்கும் என்பது உறுதி. இவ்வாறு பூரணசந்திர ஜீவா பேசினார்.