Tuesday, February 9, 2010

ஆசியாவின் முதல் ‘எனர்ஜி யுனிவர்சிட்டி’ யு.பி.இ.எஸ்

ஆசியாவின் முதல் ‘எனர்ஜி யுனிவர்சிட்டி’ யு.பி.இ.எஸ்., - 09-02-2010

பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழகம் (யு.பி.இ.எஸ்.,) இந்தியாவில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே முதல் ‘எனர்ஜி யுனிவர்சிட்டி’ என்ற பெருமை பெற்றது.

இது உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. டேராடூன், குர்கான் மற்றும் ராஜமுந்திரி என மூன்று இடங்களில் இதன் கிளைகள் அமைந்துள்ளது.


இந்த பல்கலைக்கழகத்தில் ஆயில் அன்டு கேஸ், பவர், டிரான்ஸ்பெடேசன், இன்பிராஸ்டிரக்சர், லாஜிஸ்டிக்ஸ் அன்டு சப்ளை செயின் செக்டார்ஸ் பற்றிய 35 பாடப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. மேலும் இதில் தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், எரிசக்தி பற்றிய சட்டப் படிப்புகள் மற்றும் மேலாண்மை படிப்புகள் பற்றிய துறைகளும் உள்ளன.


பாடப்பிரிவுகள்: இந்த பல்கலைக்கழகத்தில் பி.டெக்., எம்.டெக்., எம்.பி.ஏ., பி.பி.ஏ., மற்றும் எல்.எல்.பி., போன்ற பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. எம்.பி.ஏ., பிரிவுடன் சேர்ந்த பி.டெக்., இன்டகிரேட்டேடு பாடப்பிரிவும் இங்கு உள்ளது.


பி.டெக்., பாடப்பிரிவுகள்
* பெட்ரோலியம் இன்ஜினியரிங்,
* கெமிக்கல் இன்ஜினியரிங்,
* பெட்ரோலியம் அன்டு கேஸ் இன்ஜினியரிங்,
* ஜியோ சயின்ஸ் இன்ஜினியரிங்,
* ஜியோ இன்பர்மேடிக்ஸ் இன்ஜினியரிங்,
* பைப்லைன் இன்ஜினியரிங்,
* புராசஸ் இன்ஜினியரிங்,
* ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்,
* ஆட்டோமேட்டிவ் இன்ஜினியரிங்,
* பவர் சிஸ்டம் இன்ஜினியரிங்,
* இன்பிராஸ்டிரக்சர் இன்ஜினியரிங்,
* எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவுகள் இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வருகின்றன.


எம்.பி.ஏ.,வுடன் சேர்ந்த பி.டெக்., பிரிவுகள்
* ஆயில் அன்டு கேஸ்,
* ஏவியேஷன்,
* இன்பிராஸ்டிரக்சர்,
* லாஜிஸ்டிக் அன்டு சப்ளை செயின்,
* போர்ட் அன்டு ஷிப்பிங்,
* பவர் போன்ற எம்.பி.ஏ., படிப்புடன் இணைந்த பி.டெக்., பாடப்பிரிவுகள் இங்கு உள்ளன.


எம்.டெக்., பாடப்பிரிவுகள்
* பெட்ரோலியம் எக்ஸ்புளரேஷன்,
* ஹெல்த், சேப்டி அன்டு என்விரான்மென்டல் இன்ஜினியரிங்,
* பைப்லைன் இன்ஜினியரிங்,
* புராசஸ் டிசைன்,
* எனர்ஜி சிஸ்டம்ஸ் போன்ற எம்.டெக்., பாடப்பிரிவுகள் இங்கு செயல்பட்டு வருகின்றன.


எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள்
* பவர் மேனேஜ்மென்ட்,
* ஆயில் அன்டு கேஸ் மேனேஜ்மென்ட்,
* எனர்ஜி டிரேடிங்,
* ஏவியேஷன் மேனேஜ்மென்ட்,
* போர்ட் அன்டு ஷிப்பிங் மேனேஜ்மென்ட்,
* இன்பிராஸ்டிரக்சர் மேனேஸ்மென்ட்,
* லாஜிஸ்டிக் அன்டு சப்ளை செயின் மேனேஜ்மென்ட்,
* இன்பர்மேசன் சிஸ்டம்ஸ் மேனேஜ்மென்ட்,
* இன்டர்நேஷனல் பிசினஸ் போன்ற எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள் இங்கு இயங்கி வருகின்றன.


பி.பி.ஏ., பாடப்பிரிவுகள்:
* ஆயில் அன்டு கேஸ் மார்கெட்டிங்,
* எம்.பி.ஏ., பிரிவுடன் சேர்ந்த இன்டகிரேட்டேடு பி.பி.ஏ., பிரிவான ஆயில் அன்டு கேஸ் மேனேஜ்மென்ட்டும் இங்கு செயல்பட்டு வருகிறது.


எல்.எல்.பி., பாடப்பிரிவு
இப்பல்கலைக்கழத்தில் எனர்ஜி ஸ்டடீஸ் பற்றிய ஐந்து வருட இன்டகிரேட்டேடு சட்டப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. இது இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த சட்டப்படிப்பில் சேருவதற்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சரியான வயதையும் பெற்றிருப்பது அவசியம். குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று இந்த சட்டப்படிப்பில் சேரலாம்.


பணி வாய்ப்புகள்: இந்த பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியத்துறையில் படித்தவர்களுக்கு ஆயில் மற்றும் கேஸ் நிறுவனங்களில் சிறப்பான வேலைவாய்ப்பு உள்ளது. இன்ஜினியரிங் பிரிவுடன் மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கு பவர் கார்ப்பரேஷன்கள், பவர் உற்பத்தி நிலையங்கள், கன்சல்டன்சிகள் மற்றும் இது சம்பந்தப்பட்ட அரசு அலுவலங்களில் வேலைவாய்ப்பு உள்ளது. பெட்ரோலியம் உற்பத்தி நாடுகளில் இவர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் பயிற்றுநர் போன்ற பிரிவுகளிலும் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.


இப்பல்கலைக்கழகம் யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம் என்ற பெருமை பெற்றது. பிரிட்டனில் உள்ள எனர்ஜி இன்ஸ்டிடியூட்டை பின்பற்றி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் எனர்ஜி பல்கலைக்கழகம் இதுதான். இந்தியாவில் முதல் முதலாக இங்குதான் பயோ - டீசல் ஆய்வகம் அமைக்கப்பட்டது. இந்தியாவில் எஸ்.ஏ.பி., தொழில்நுட்பமும் இந்த நிறுவனத்தில் தான் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த பல்கலைக்கழகம் பற்றிய தகவல்களை www.upesindia.org என்ற இணைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வேகமாக முன்னேறுகிறது இந்தியா : மத்திய புள்ளியியல் துறை தகவல்

வேகமாக முன்னேறுகிறது இந்தியா : மத்திய புள்ளியியல் துறை தகவல்
பிப்ரவரி 10,2010

Front page news and headlines today

சென்னை :"பொருளாதார மந்த நிலையிலிருந்து வேகமாக மீண்டுவரும் நாடுகளில் சீனாவை தொடர்ந்து இந்தியா, இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மத்திய புள்ளியியல் துறையின் ஆய்வுப்படி, கடந்த ஆண்டில் மட்டும் 6.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. வரும் ஆண்டில் இது 7.2 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.



வருடத்தின் முதல்பாதியில் மந்தமாக காணப்படும் ஜி.டி.பி., வளர்ச்சி, வருடத்தின் பிற்பகுதியில் வேகமாக முன்னேற வாய்ப்புள்ளது' என, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டு விவசாயத் துறையில் வளர்ச்சி 1.6 சதவீத இழப்பும், நடப்பு வருடத்தில் இழப்பு 0.2 சதவீதமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருள் உற்பத்தி சார்ந்த தொழில்களில் கடந்த ஆண்டு 3.2 சதவீத வளர்ச்சியும், நடப்பு வருடம் 8.9 சதவீத வளர்ச்சியும் இருக்கும் என்று தெரிகிறது.ஏற்றுமதி, போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறையில் 6.5 சதவீத வளர்ச்சியும், நிதியுதவி, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரத் துறையில் 10.1 சதவீத வளர்ச்சியும் பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.



மேலும், சமூகம் மற்றும் தனிப்பட்ட மனிதர்களுக்கான செலவுகள் கடந்தாண்டு 13.9 சதவீதமாகவும், நடப்பு ஆண்டு 9.9 சதவீதமாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு உணவுப்பொருள் விலை ஏற்றத்திற்கு காரணம், பருவம் தவறி பெய்த மழையால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி பாதிப்படைந்ததே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய புள்ளியியல் துறையை தவிர்த்து, மத்திய நிதி அமைச்சகத்தின் ஆய்வின்படி நடப்பு ஆண்டு ஜி.டிபி., வளர்ச்சி 7.75 சதவீதமாகவும், ரிசர்வ் வங்கியின் ஆய்வுப்படி 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விஷயத்தில் ஏமாற்றப்படுகிறது தமிழகம்
பிப்ரவரி 10,2010

Front page news and headlines today

கிருஷ்ணா - கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவில் தமிழகத்துக்கும் பங்கு அளிக்கப்படும் என்று வாக் குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும் இந்த வாக்குறுதி, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உட்பட சம்பந்தப்பட்ட சில அரசு துறைகளுக்கு இடையே, கால்பந்து போல, மாறி மாறி உதைபட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு கிடைத்துள்ளது. இந்த எரிவாயுவில் தமிழகத்திற்கும் பங்கு வேண்டுமென்று, எரிவாயுவை எடுத்து வழங்கும் உரிமம் பெற்ற, ரிலையன்ஸ் நிறுவனத்திடமும், மத்திய அரசிடமும், பல முறை தமிழக அரசு கோரிக்கை வைத்தது.எந்தெந்த ஊர்கள் வழியாக எடுத்துச் செல்வது, எந்த இடத்தில் குழாய்களை பதிப்பது போன்ற விவரங்கள், இறுதி செய்யப்பட்டன. இதற்கான அனுமதி, 2007ம் ஆண்டு, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அளித்தது. கர்நாடகா, மேற்குவங்க மாநிலங்களுக்கும், இந்த எரிவாயு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.தமிழகத்தின் பங்காக, நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ஸ்டாண்டர்டு சதுர மீட்டர் அளவு, எரிவாயு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில், சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சி, திருச்சி, நாகை, புதுக்கோட் டை, சேலம், நெல்லை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய நகரங்களுக்கு, எரிவாயு வழங்கும், "சிட்டி காஸ்' திட்டமும் அறிவிக்கப்பட்டது. புதிதாக துவங்கப்படும் மின்திட்டங்களுக்கும் எரிவாயு அளிக்க வேண்டும் என்று, தமிழக அரசு நிபந்தனை விதித்தது.திடீரென, 2007ம் ஆண்டு, பெட்ரோலிய ஒழுங்குமுறை ஆணையம் என்று புதிதாக ஒரு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டது.தமிழகத்திற்கு எரிவாயு வழங்கும் திட்டத்தை, இந்த ஆணையம் பரிசீலித்தது. எந்த முடிவும் எடுக்காமல், இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போட்டது. 2009ம் ஆண்டு ஜூனில், "சிட்டி காஸ்' வழங்கும் திட்டத்திற்கு மட்டும், ஆணையம் ஒப்புதல் வழங்கியது.

உ.பி.,யில் மதுரா, மீரட், ஆக்ரா, புலந்த்சர், ராஜஸ்தானில் கோட்டா, அஜ்மீர், அரியானாவில் சோன்பேட், ம.பி., யில் திவாஸ், ஆந்திராவில் காக்கிநாடா உட்பட 13 நகரங்களுக்கு எரிவாயு அளிக்கலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டது.மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, தன் மாநிலத்தில் உள்ள ஒரு நகருக்காவது எரிவாயு கொடுக்க வேண்டும் என சண்டை போட்டதால், கிடைத்தது; இல்லையெனில், கிடைத்திருக்காது. தமிழக நகரங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.இதற்கிடையில், டில்லி ஐகோர்ட்டில், ஒரு பொதுநலவழக்கு தொடரப்பட்டது. இந்த எரிவாயுவைப் பகிர்ந்து கொள்வதில், முறைகேடு நடக்கிறது என்று கூறி, தொடரப்பட்ட அந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், எரிவாயு பகிர்ந்து வழங்கும் அதிகாரம், பெட்ரோலிய ஒழுங்கு முறை ஆணையத்திற்கு இல்லை என்று கூறி தீர்ப்பளித்து விட்டது.

இதற்கிடையே முதல்வர் கருணாநிதி, தமிழகத்துக்கு எரிவாயு அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தி, பிரதமர், சோனியா ஆகியோருக்கு, நான் கைந்து கடிதங்கள் எழுதினார்.டில்லி ஐகோர்ட் தீர்ப்பு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை.இரு தினங்களுக்கு முன், பெட்ரோலிய அமைச்சக செயலர் சுந்தேரசனை, பெட்ரோலிய ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மான்சிங் சந்தித்து, ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் போது, டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டாமென்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால், அங்கு வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு சொல்ல ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள், கிருஷ்ணா - கோதாவரி எரிவாயு திட்டமே திசை மாறிப் போக வாய்ப்பு ஏற்படும். தமிழகத்திற்கு எதுவும் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும்.

காவிரியும், எரிவாயுவும் : காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நதிநீர் ஆணையம் இறுதி தீர்ப்பு அளித்தது. இதை அமல்படுத்தாமல், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றதன் விளைவு, தமிழகத்தின் சோகம் இன்னமும் தீர்ந்தபாடில்லை.ஒரு பிரச்னை சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றாலே அது, இழுத்தடிக்கும் தந்திரம்தான். காவிரி பங்கீடு எப்படி முடங்கி கிடக்கிறதோ அதேபோலதான் தற்போது எரிவாயு பங்கீடும் முடங்கும் நிலையை அடைந்துவிட்டது.

குழாய்கள் மூலம் குஜராத்துக்கு தான்: துணை முதல்வர் ஸ்டாலின் இம்முறை டில்லிக்கு வந்திருந்தபோது பிரதமர் மற்றும் சோனியாவை சந்தித்தார். டில்லியில் பல முறை நிருபர்களை சந்தித்தபோதெல்லாம் திரும்ப திரும்ப அவர் கூறிய விஷயம், "கிருஷ்ணா - கோதாவரி படுகை எரிவாயுவை தமிழத்துக்கு தர வேண்டுமென்று வலியுறுத்தினேன்' என்பது தான். ஏற்கனவே குழாய்கள் பதிக்கப்பட்டு, குஜராத், மகாராஷ்டிராவுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தின் பங்கை தருவது குறித்து, ஒழுங்குமுறை ஆணையம், சுப்ரீம் கோர்ட் சென்று திரும்பிய பிறகே தெரியும். இந்நிலையில், தமிழகத்திற்கு எரிவாயு என்பது எட்டாக்கனி தான்.

மாசில்லா நகரங்கள்: எரிவாயு மட்டும் தமிழகத்திற்கு கிடைத்துவிட்டால், ஏற்கனவே திட்டமிட்டிருக்கும் நகரங்களில் இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் சி.என்.ஜி.,க்கு மாறிவிடும். அனைத்து நகரங்களுமே மாசுகட்டுப்பாடு கொண்ட நகரங்களாக மாறிவிடும். காற்று மாசுபடாமல், கார்பன் புகை இல்லாமல் சுற்றுச்சூழல் மேம்படும். எரிவாயுவை பயன்படுத்தி தற்போதைக்கு இந்தியாவிலேயே சி.என்.ஜி.,யால் வாகனங்கள் இயக்கப்படுவது டில்லியில் மட்டும் தான். "சிட்டி காஸ் சப்ளை' திட்டம், டில்லி, மும்பை ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் தான் செயல்படுகிறது

ஸ்டேட்போர்டா ? சி.பி.எஸ்.இ.,யா? பெற்றோர் குழப்பம்

ஸ்டேட்போர்டா ? சி.பி.எஸ்.இ.,யா? பெற்றோர் குழப்பம்
பிப்ரவரி 10,2010

Front page news and headlines today

உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம் உடைய மிகப் பெரிய மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வி முறைக்கு மாறுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இது தொடர்பாக, பெற்றோரிடமும் பள்ளி நிர்வாகங்கள் ஆலோசனை கேட்டு வருகின்றன.



"ஸ்டேட் போர்டு வேண்டுமா; சி.பி.எஸ்.இ., வேண்டுமா' என பெற்றோரிடம் மெட்ரிக் பள்ளிகள் கேட்டு வருவதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், வரும் ஜூன் மாதம் சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது. முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு வரும் கல்வி ஆண்டிலும், அதற்கு அடுத்த கல்வியாண்டில் மற்ற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகிறது."இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் பாடத் திட்டங்கள் தரமானதாக இருக்கும்' என்று, தமிழக அரசும், கல்வித்துறை உயர் அதிகாரிகளும் பலமுறை வாக்குறுதி அளித்தாலும், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிடையே குறிப்பாக, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெரிய பள்ளிகளிடையே ஒருவித தயக்கம் நிலவுகிறது. இந்த பள்ளிகளின் பெற்றோரிடமும் தயக்கம் இருக்கிறது.



அரசு பள்ளிகளில் நடத்தப்படும் அதே பாடத்திட்டத்தை மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் நடத்தினால், வித்தியாசம் இருக்காது என்றும், அப்படி நடத்தினால் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் என்றும், தனியார் பள்ளிகள் கருதுகின்றன. இதனால், சி.பி.எஸ்.இ., முறைக்கு மாறுவது குறித்து, பல பள்ளிகள் ஆலோசித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள சில மெட்ரிக் பள்ளிகள், பள்ளி வளாகத்திற்குள் புதிதாக சி.பி.எஸ்.இ., பள்ளியை துவக்க நடவடிக்கை எடுத்துள்ளன.இதற்கிடையே, "ஸ்டேட் போர்டு வேண்டுமா; சி.பி.எஸ்.இ., வேண்டுமா' என, பெற்றோரிடம் கடிதம் கொடுத்து, பல பள்ளிகள் கருத்துக்களை கேட்டு வருகின்றன. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ரிக் பள்ளி, பெற்றோருக்கு நோட்டீஸ் வினியோகித்து, கருத்து கேட்டுள்ளது.



அப்பள்ளி விடுத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருவதையொட்டி, அனைத்து மெட்ரிக் பள்ளிகளும், "ஸ்டேட் போர்டின்' கீழ் கொண்டுவரப்பட உள்ளன. வரும் ஆண்டுகளில் சி.பி.எஸ்.இ., அங்கீகாரத்தை பெறுவது குறித்தும், பள்ளி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.ஸ்டேட் போர்டிலேயே தொடர்ந்து இருக்கலாமா அல்லது சி.பி.எஸ்.இ., முறைக்கு மாறலாமா என்பது குறித்து, பெற்றோர் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில், உரிய முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீரென, "ஸ்டேட் போர்டு வேண்டுமா; சி.பி.எஸ்.இ., வேண்டுமா' என கேட்டுள்ளதால், பெற்றோர், குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.



தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் கூறும்போது, "விசாலமான இடமும், உள் கட்டமைப்பு வசதிகளும் கொண்ட மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., முறைக்கு மாறுவதற்கு முடிவெடுத்துள்ளன. சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்றுவிடுவோம் என்று கூறி, சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. எந்த முறையின் கீழ் பள்ளியை நடத்துவது என்பது குறித்து, பள்ளி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், பெற்றோரை குழப்பும் வகையில் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன' என்றார்.



சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க வேண்டுமெனில், பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து, தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.,) பெற வேண்டும். சமச்சீர் கல்வி அமலாவதன் எதிரொலியாக, சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பினால், அதை தமிழக அரசு ஏற்காது என்று தெரிகிறது.



இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "இதுவரை என்.ஓ.சி., கேட்டு யாரும் விண்ணப்பிக்கவில்லை. அதிகமான தனியார் பள்ளிகள், வேறு கல்வி முறைக்கு மாற விரும்பி, என்.ஓ.சி., கேட்டு விண்ணப்பித்தால், அது குறித்து தமிழக அரசுடன் ஆலோசனை செய்தபிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.