| இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை |
| சென்னை ஐ.ஐ.டி., 1959ம் ஆண்டில் துவங்கப்பட்டது. மொத்தம் 250 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை ஐ.ஐ.டி.,யில் 460 பேராசிரியர்களும், 4 ஆயிரத்து 500 மாணவர்களும், ஆயிரத்து 250 நிர்வாக ஊழியர்களும் உள்ளனர். கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப ஆலோசனை என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. அறிவியல், பொறியியல் சம்பந்தப்பட்ட15 துறைகள், சில ஆராய்ச்சி மையங்கள், 100 ஆய்வக்கூடங்கள் ஆகியவற்றுடன் திறம்பட செயல்பட்டு வருகிறது. சர்வதேச தரமிக்க ஆசிரியர்கள், புத்திகூர்மையான மாணவர்கள், அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள், சிறந்த நிர்வாகம் என சென்னை ஐ.ஐ.டி., சர்வதேச புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக விளங்குகிறது. இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்.,): பி.டெக்., / எம்.டெக்., டியூயல் டிகிரி: கட்டண விபரம்: தொடர்புகொள்ள: நன்றி: தினமலர் கல்விமலர்.கொம் |
Wednesday, February 10, 2010
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை
கொசுக்களை விரட்டும் மொபைல்போன் ரிங்டோன்
புதுடில்லி:ரத்தம் உறிஞ்சும் கொ சுக்களை விரட்ட, கொசுவர்த்திச் சுருள், ஸ்பிரே, க்ரீம் போன்றவை இனித் தேவையில்லை. அதற்குப் பதிலாக சில மொபைல் போன்களிலிருந்து வரும் ஒலியே, கொசுக்களை விரட்டி விடுகிறது.உலகில், மொபைல் போன் சந்தையில் குறிப்பிட்ட இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு திட்டங்களை, பல மொபைல் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் இப்போது, கொசுவை விரட்டும் ரிங்டோன்கள் பிரபலமாகி வருகின்றன.
மனிதனின் காதால் கேட்க முடியாத அள வுக்கு மெல்லிய ஒலி அலைகள் கொண்ட ரிங்டோன்கள் மொபைல் போன்களிலிருந்து வெளிப்படும். இந்த ரிங்டோன்கள், மொபைல் போன் வைத்திருப்பவரைச் சுற்றி ஒரு மீட்டர் தூரத்துக்கு கொசுவை அண்டவிடாமல் துரத்தி விடும்.இதுபோன்ற மொ பைல் போன்களை "மைக்ரோவேவ் இன்பர் மேட்டிக்ஸ் லிமிடெட்' நிறுவனமும், வேறு சில நிறுவனங்களும் வெளியிட்டுள்ளன.
மேலும், www.gackoandfly.com , www.jetcityorange.com ஆகிய வெப்சைட்டுகளும் இதுபோன்ற ரிங்டோன்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்து தருகின்றன.
ஆபாச வெப்சைட்களுக்கு தடை வருமா?
புதுடில்லி : ""ஆபாச வெப்சைட்கள் மற்றும் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் கருத்துக்களை வெளியிடும் வெப்சைட்களையும் தடை செய்ய மத்திய அரசு பரிசீலிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, தகவல் உரிமை சட்டத்தை திருத்தலாமா என்று யோசித்து வருகிறது.
டில்லியில், சைபர் சட்ட அமலாக்க நிகழ்ச்சி மற்றும் தேசிய கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இது தொடர்பாக தன் வேதனையை பகிர்ந்து கொண்டார். அவர் பேசிய கருத்துக்களில் முக்கியமான சில: இந்தியாவில் இணையதளங்கள் மூலமான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. போலியான பெயர்களில் குற்றவாளிகள் இவற்றில் ஈடுபடுவதால் புலனாய்வு ஏஜன்சிகளுக்குத் தவறான தகவல்கள்தான் கிடைக்கின்றன. ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் வெப்சைட்கள் அதிகரித்து விட்டன. அவற்றில் அத்துமீறல்களும், அப்பாவிகளை சிக்க வைத்து வியாபாரமாக்கும் மோசடிகளும் நடக்கின்றன. இது தவிர, வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் பேச்சுக்களை வெளியிடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எந்த ஒரு விஷயம் பற்றியும் கேவலமான விமர்சனங்களை வெளியிடும் சுதந்திரமும் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட விஷயம் குறித்து தவறான பிரசாரம் செய்யவும் வளைத்தளங்கள் வழிவகுக்கின்றன.
ஆபாச மற்றும் தவறான கருத்துக்களை பரப்புவதில் ஈடுபடும் வெப்சைட்களால் சமுதாயத்தில் பெரும் சீரழிவுக்கு வழி ஏற்படுகிறது; தவறான கருத்துக்களால் பல்வேறு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற வெப்சைட்களை தடை செய்வது பற்றி மத்திய அரசு யோசிக்க வேண்டும். இதற்காக, எல்லா இணையதளங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை; வெப்சைட்களை நடத்துவோர் வேறு; அதை இயக்குவோர் வேறு. அவர்களை அடையாளம் கண்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்சைட்களில் உள்ள விவரங்களால் சில சமயம் பாதிப்பும் வருகிறது என்பதற்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த வேண்டும். சுப்ரீம்கோர்ட் இணையதளத்தில் நீதிபதிகள் தங்கள் வங்கிக் கணக்கு எண் முதற்கொண்டு விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதுபோன்று வெளிப்படையாக சில தகவல்களை வெளியிட்டால், நெட் திருடர்கள் வங்கிக் கணக்கைச் சூறையாட வசதியாகப் போய்விடுகிறது.
இப்படி இணையதளத்தில் நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்ட சில நாட்கள் கழித்து ஒருவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், நீதிபதிகளின் வங்கிக் கணக்கு எண்களை நான் உடனடியாக நீக்கிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். உலகின் எந்த மூலையில் இருந்தும் எங்கும் உள்ளவர்களுடன் பேச, தொடர்பு கொள்ள மிகவும் வசதியாக உள்ளது கம்ப்யூட்டர் இன்டர்நெட் என்றாலும், எந்த அளவுக்கு அதனால் பலன் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு தீமையும் உள்ளது. எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியிலும் நல்லது உள்ள அளவு, கெட்டதும் இருக்கத்தான் செய்கிறது. கம்ப்யூட்டர் மூலம் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள முடிகிறது என்றாலும், தவறான வழிகளில் ஆதாயம் சேர்ப்போர், அதை தவறாக பயன்படுத்தவே நினைக்கின்றனர். இதுபோன்ற வசதிகள் மக்களைச் சுரண்டாமல், துன்பப்படுத்தாமல் இருக்கும் வகையில் சட்டரீதியான அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை ஏஜென்சிகள் உறுதியளிக்க வேண்டும். இவ்வாறு கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பேசுகையில்,"சர்வதேச அளவில் உள்ள சட்ட நடைமுறைகளை ஆராய்ந்து அதற்கேற்ப, இதுபோன்ற வெப்சைட்களை தடை செய்ய முடியுமா என்பது ஆராயப்படும்; மேலும், தகவல் உரிமை சட்டத்தில் இது தொடர்பாக மாற்றம் கொண்டுவந்து, தவறுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டோர், இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வழி செய்யப்படும்' என்று தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் கவர்னர்
ஐதராபாத் : செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில், ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இச்சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகள், அரசு மருத்துவமனைக்கு செல்லாமல், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. ஆனால், ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், கட்டியை அகற்ற, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது, மருத்துவ வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கவர்னர் நரசிம்மனின் இடது தொடையில், சிறிய கட்டி ஏற்பட்டது. "பெடங்குலேடெட் டெர்மோலைபோமா' என கூறப்படும் இக்கட்டியால், சிரமப்பட்டு வந்தார். அவரது தனி டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினர். நேற்று முன்தினம் காலை, மனைவி விமலாவுடன் மருத்துவமனைக்கு வந்த கவர்னரை, மருத்துவத் துறை முதன்மை செயலர் ரமேஷ்குமார், காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக்குமார், பிளாஸ்டிக் சர்ஜன் மோகனகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று, "அட்மிட்' செய்தனர். அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, அரை மணி நேரத்தில், இடது தொடையில் இருந்த கட்டியை அகற்றினர். அரை மணி நேரம் ஓய்வெடுத்த கவர்னர் நரசிம்மன், மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்து, கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டார்.
டாக்டர் ரமேஷ்குமார் கூறுகையில், "ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வரும் அரசு மருத்துவமனை மீதுள்ள நம்பிக்கையால், கவர்னர் இங்கு சிகிச்சை பெற்றது முழு திருப்தி அளிக்கிறது' என்றார்.பின்பற்றுவரா அரசியல்வாதிகள்...: சிறு வியாதி என்றாலும், தனியார் மருத்துவமனை மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெறும் அரசியல்வாதிகள் மத்தியில், மாநிலத்தின் முதல் குடிமகனாக விளங்கும் கவர்னர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தகவல், பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவரைத் தொடர்ந்து அரசியல்வாதிகளும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், பொதுமக்கள் மத்தியில் அரசு மருத்துவமனைகளின் தரம், வெளி உலகிற்கு தெரியவரும்
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி உள்ள இந்தியர்கள் 2 லட்சம்
வாஷிங்டன் : "அமெரிக்காவில், இரண்டு லட்சம் இந்தியர்கள் சட்ட விரோதமாக தங்கியிருக்கின்றனர்' என, 2009ம் ஆண்டு சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: அமெரிக்காவில், 2008ம் ஆண்டு 1.60 லட்சம் இந்தியர்கள், சட்ட விரோதமாக தங்கியிருந்தனர். கடந்தாண்டு, சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கையில், 40 ஆயிரம் பேர் அதிகரித்துள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. அதாவது, 2008ம் ஆண்டு, 1.16 கோடியாக இருந்த, அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு, 1.08 கோடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில், அங்கு சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, எல் சால்வடார், கவுதமாலா, ஹோண்டுரா, பிலிப்பைன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறும் மெக்சிகோ நாட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.