புதுடில்லி : ""ஆபாச வெப்சைட்கள் மற்றும் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் கருத்துக்களை வெளியிடும் வெப்சைட்களையும் தடை செய்ய மத்திய அரசு பரிசீலிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, தகவல் உரிமை சட்டத்தை திருத்தலாமா என்று யோசித்து வருகிறது.
டில்லியில், சைபர் சட்ட அமலாக்க நிகழ்ச்சி மற்றும் தேசிய கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இது தொடர்பாக தன் வேதனையை பகிர்ந்து கொண்டார். அவர் பேசிய கருத்துக்களில் முக்கியமான சில: இந்தியாவில் இணையதளங்கள் மூலமான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. போலியான பெயர்களில் குற்றவாளிகள் இவற்றில் ஈடுபடுவதால் புலனாய்வு ஏஜன்சிகளுக்குத் தவறான தகவல்கள்தான் கிடைக்கின்றன. ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் வெப்சைட்கள் அதிகரித்து விட்டன. அவற்றில் அத்துமீறல்களும், அப்பாவிகளை சிக்க வைத்து வியாபாரமாக்கும் மோசடிகளும் நடக்கின்றன. இது தவிர, வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் பேச்சுக்களை வெளியிடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எந்த ஒரு விஷயம் பற்றியும் கேவலமான விமர்சனங்களை வெளியிடும் சுதந்திரமும் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட விஷயம் குறித்து தவறான பிரசாரம் செய்யவும் வளைத்தளங்கள் வழிவகுக்கின்றன.
ஆபாச மற்றும் தவறான கருத்துக்களை பரப்புவதில் ஈடுபடும் வெப்சைட்களால் சமுதாயத்தில் பெரும் சீரழிவுக்கு வழி ஏற்படுகிறது; தவறான கருத்துக்களால் பல்வேறு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற வெப்சைட்களை தடை செய்வது பற்றி மத்திய அரசு யோசிக்க வேண்டும். இதற்காக, எல்லா இணையதளங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை; வெப்சைட்களை நடத்துவோர் வேறு; அதை இயக்குவோர் வேறு. அவர்களை அடையாளம் கண்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்சைட்களில் உள்ள விவரங்களால் சில சமயம் பாதிப்பும் வருகிறது என்பதற்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த வேண்டும். சுப்ரீம்கோர்ட் இணையதளத்தில் நீதிபதிகள் தங்கள் வங்கிக் கணக்கு எண் முதற்கொண்டு விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதுபோன்று வெளிப்படையாக சில தகவல்களை வெளியிட்டால், நெட் திருடர்கள் வங்கிக் கணக்கைச் சூறையாட வசதியாகப் போய்விடுகிறது.
இப்படி இணையதளத்தில் நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்ட சில நாட்கள் கழித்து ஒருவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், நீதிபதிகளின் வங்கிக் கணக்கு எண்களை நான் உடனடியாக நீக்கிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். உலகின் எந்த மூலையில் இருந்தும் எங்கும் உள்ளவர்களுடன் பேச, தொடர்பு கொள்ள மிகவும் வசதியாக உள்ளது கம்ப்யூட்டர் இன்டர்நெட் என்றாலும், எந்த அளவுக்கு அதனால் பலன் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு தீமையும் உள்ளது. எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியிலும் நல்லது உள்ள அளவு, கெட்டதும் இருக்கத்தான் செய்கிறது. கம்ப்யூட்டர் மூலம் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள முடிகிறது என்றாலும், தவறான வழிகளில் ஆதாயம் சேர்ப்போர், அதை தவறாக பயன்படுத்தவே நினைக்கின்றனர். இதுபோன்ற வசதிகள் மக்களைச் சுரண்டாமல், துன்பப்படுத்தாமல் இருக்கும் வகையில் சட்டரீதியான அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை ஏஜென்சிகள் உறுதியளிக்க வேண்டும். இவ்வாறு கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பேசுகையில்,"சர்வதேச அளவில் உள்ள சட்ட நடைமுறைகளை ஆராய்ந்து அதற்கேற்ப, இதுபோன்ற வெப்சைட்களை தடை செய்ய முடியுமா என்பது ஆராயப்படும்; மேலும், தகவல் உரிமை சட்டத்தில் இது தொடர்பாக மாற்றம் கொண்டுவந்து, தவறுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டோர், இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வழி செய்யப்படும்' என்று தெரிவித்தார்.