வாஷிங்டன் : "அமெரிக்காவில், இரண்டு லட்சம் இந்தியர்கள் சட்ட விரோதமாக தங்கியிருக்கின்றனர்' என, 2009ம் ஆண்டு சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: அமெரிக்காவில், 2008ம் ஆண்டு 1.60 லட்சம் இந்தியர்கள், சட்ட விரோதமாக தங்கியிருந்தனர். கடந்தாண்டு, சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கையில், 40 ஆயிரம் பேர் அதிகரித்துள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. அதாவது, 2008ம் ஆண்டு, 1.16 கோடியாக இருந்த, அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு, 1.08 கோடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில், அங்கு சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, எல் சால்வடார், கவுதமாலா, ஹோண்டுரா, பிலிப்பைன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறும் மெக்சிகோ நாட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.